ADDED : ஜூன் 03, 2024 06:09 AM

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், திருச்சி, சேலத்தில், புதிதாக நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், சென்னையில் பெருநகர் வளர்ச்சி குழுமம் உள்ளது. இதேபோல, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில், திட்டமிடல் பணிக்காக, புதிய குழுமங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
நகர், ஊரமைப்பு சட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள், இதற்கான பரிந்துரைகளை தெரிவித்தன. எனினும், இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போதைய தமிழக அரசு, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகரங்களுக்கு, புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தது. இந்த குழுமங்கள் விரைவில் இயங்கத் துவங்க உள்ளன.
இதையடுத்து, 'திருச்சி, சேலத்திலும், புதிதாக நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும்' என, தமிழக அரசு, 2022ல் அறிவித்தது. இதற்கான அரசாணைகள் தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டது.
இதுகுறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகரங்களில் ஏற்படுத்தப்பட்ட புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில், கூடுதல் கவனம் செலுத்தி வரும் நிலையில், திருச்சி, சேலத்தில், புதிதாக நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் அமைப்பதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில், முழுமை திட்டங்கள், மண்டல திட்டங்கள் பணிகளின் நிலவரம், எந்தெந்த பகுதிகளை சேர்ப்பது என்பது குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபின், இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.