கையெழுத்திட்ட அரசு பள்ளி மாணவியர் ஆசிரியை மிரட்டும் வீடியோ: பா.ஜ., அதிர்ச்சி
கையெழுத்திட்ட அரசு பள்ளி மாணவியர் ஆசிரியை மிரட்டும் வீடியோ: பா.ஜ., அதிர்ச்சி
ADDED : மார் 09, 2025 01:29 AM
ராசிபுரம்: பா.ஜ., நடத்தும், 'சமக் கல்வி எங்கள் உரிமை' கையெழுத்து இயக்கத்தில், கையெழுத்திட்ட அரசு பள்ளி மாணவியரை, ஆசிரியை மிரட்டும் வீடியோ, பெற்றோர், பா.ஜ.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய கல்வி கொள்கையில் உள்ள, மும்மொழி பாடத்திட்டத்திற்கு, தமிழக ஆளுங்கட்சியான, தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், பா.ஜ., மட்டும், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
இருமொழி கொள்கையால், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவதாக, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார். அதன்படி, மார்ச், 5ல் தொடங்கி கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், 'சமக்கல்வி எங்கள் உரிமை' கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட, நாமக்கல் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர், இருவரை ஆசிரியை ஒருவர் மிரட்டி, விசாரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், மாணவியர் இருவரும், கைகளை பின்னால் கட்டிக்கொண்டு பயந்தபடி நிற்கின்றனர்.
அப்போது ஆசிரியை ஒருவர், 'நேற்று மதியம் கையெழுத்து எங்காவது போட்டீங்களா?' என, மிரட்டும் தோனியில் கேட்கிறார்.
அப்போது அந்த மாணவியர், 'பஸ் ஸ்டாண்டில் இருந்து ஸ்கூலுக்கு வரும் வழியில், இரண்டு அக்காங்க எங்களை கூட்டிட்டு போய் கையெழுத்து வாங்குனாங்க' என்கின்றனர்.
ஆசிரியை: என்னான்னு சொல்லி கையெழுத்து வாங்குனாங்க?
மாணவியர்: ஹிந்தியை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல கொண்டு வரதுக்கு கையெழுத்து போடச் சொன்னாங்க.
ஆசிரியை: அதற்கு நீங்க என்ன சொன்னீங்க.
மாணவியர்: ஸ்கூலுக்கு லேட்டாகுது போகனும்னு சொன்னோம்.
ஆசிரியை: அதற்கு அவங்க என்ன சொன்னாங்க.
மாணவியர்: கையெழுத்து தானே, போட்டுட்டு போங்கன்னு சொன்னாங்க.
ஆசிரியை: அவங்களா தான் வந்து போடச் சொன்னாங்களா, நீங்களா போட்டீங்களா?
இவ்வாறு அந்த உரையாடல் உள்ளது.
இந்த இயக்கம் ஆரம்பித்து, மூன்று நாட்களாக அரசுப் பள்ளிகளை குறிவைத்து கையெழுத்து பெற்று வந்தவர்களுக்கு, ஆசிரியை மிரட்டி விசாரிக்கும் வீடியோ, பெற்றோர், பா.ஜ.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.