வீடியோ பதிவு ஆதாரமில்லாத செய்தி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விளக்கம்
வீடியோ பதிவு ஆதாரமில்லாத செய்தி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விளக்கம்
ADDED : செப் 14, 2024 09:00 PM
சென்னை:'அப்பாவு மணி அடிச்சிகிட்டிருந்திருப்பார்' என்ற தலைப்பில், தான் பேசியதாக வெளியிடப்பட்ட செய்தி, சமூக அமைதியை கெடுப்பதாகவும், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது' என, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. இவர் பேசியதாக வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது.
பதிவில், 'நாங்கள் மதம் மாற்றுவதாக, ஆர்.எஸ்.எஸ்.,காரன் சொல்றான். நாங்கள் மதம் மாற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் கோவில் ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள். எவ்வளவு பேர், ஹிந்து மதத்தில் இருந்து, கிறிஸ்துவ மதத்துக்கு மாறி உள்ளனர் என்பது தெரியும். அதற்கான பட்டியலை நாங்கள் தருகிறோம்
'எங்க மதத்துக்கு வாங்க; நல்லா படிக்கலாம்; பட்டதாரி ஆகலாம்; சபாநாயகர் ஆகலாம். அப்பாவு கிறிஸ்துவராக இருந்ததாலேயே, பாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோவிலில் மணி அடித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்' என, அந்த வீடியோ பதிவில், அவர் பேசி இருந்தார். அவரது பேச்சு, பதிவில் உள்ளபடியே, நம் நாளிதழில், கடந்த 9ம் தேதி, செய்தியாக வெளியானது.
இந்நிலையில் செய்தி தொடர்பாக, ஜார்ஜ் பொன்னையா அளித்துள்ள விளக்கம்:
என்னை பற்றிய போலியான, விஷமத்தனமான செய்தி, தங்கள் நாளிதழில் வந்தது, என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தங்கள் யு டியூப் பக்கத்திலும், இதை பார்த்தேன். இத்தகைய உண்மைக்கு புறம்பான செய்தி, மக்கள் இடையே நிலவும் சமூக அமைதியை கெடுப்பதாக உள்ளது. இது, எனக்கு மன உளைச்சலையும், என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. இது ஆதாரமில்லாத செய்தி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.