மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடி நாங்களே காரணம் என்கிறார் விஜயபாஸ்கர்
மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடி நாங்களே காரணம் என்கிறார் விஜயபாஸ்கர்
ADDED : பிப் 27, 2025 10:32 PM
சென்னை:தி.மு.க., ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சீரழிந்து கிடப்பதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
'ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனம்' என்று கிராமங்களில், மைனர்கள் சுற்றித் திரிவதுபோல், விதிவசத்தால் முதல்வரான ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் மார்தட்டிக்கொண்டு அலைகிறார். மருத்துவத் துறையில், தமிழகம் முன்னோடியாக இருப்பதற்கு, கருணாநிதியே காரணம் எனக் கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஸ்டாலின் முயற்சித்துள்ளார்.
டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல மருத்துவ பணிகள் கழகம் ஆகியவை, அ.தி.மு.க., ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த 2011 முதல் 2021 வரை, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், 19 புதிய மருத்துவ கல்லுாரிகள், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2,000 அம்மா மினி கிளினிக்குகள் ஆரம்பிக்கப்படன. நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு, அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டன.
குழந்தைகள் பாலுாட்டும் அறை, அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா சஞ்சீவினி திட்டம், அம்மா ஊட்டச்சத்து திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் என, அ.தி.மு.க., அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதனால், 2015 முதல் 2020 வரை, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மத்திய அரசின் விருதுகள் பெற்றோம்.
ஆனால், அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியதுதான் தி.மு.க., அரசின் சாதனை. அ.தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகத்தை, தற்போது முதல்வர் மருந்தகமாக, 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்துள்ளனர்.
கடந்த 45 மாத கால தி.மு.க., ஆட்சியால், தமிழக மருத்துவத் துறை, குறிப்பாக அரசு மருத்துவமனைகள் சீரழிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.