6,000 பேருக்கு தொழில் பயிற்சி கைவினை திட்டத்தில் துவக்கம்
6,000 பேருக்கு தொழில் பயிற்சி கைவினை திட்டத்தில் துவக்கம்
ADDED : பிப் 22, 2025 11:18 PM
சென்னை:தமிழகத்தில் சிற்பம், மர வேலை, நகை செய்தல், தையல் உள்ளிட்ட, 25 கைவினை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர், புதிய தொழில் துவங்கவும், ஏற்கனவே செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடன் வழங்க, கலைஞர் கைவினை திட்டத்தை 2024 டிசம்பரில் அரசு துவக்கியது.
இத்திட்டத்தின் கீழ், 25 சதவீத மானியத்துடன் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
இது தவிர, திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். கைவினை திட்டத்திற்கு, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் வணிக ஆணையர் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நேற்று வரை, 35,273 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்ப பரிசீலனை முடிவடைந்த 6,200 நபருக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு, தாங்கள் மேற்கொண்டு வரும் தொழிலில் புதிய தொழில்நுட்பம் தொடர்பாக, திறன் மேம்பாட்டு கழகம், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் வாயிலாக, 7 - 10 நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பயிற்சியை முடித்ததும், கடன் வழங்கும் பணி துவக்கப்படும்.