' ஏப்., 19ல் இலவச பஸ் விட்டால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்'
' ஏப்., 19ல் இலவச பஸ் விட்டால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்'
ADDED : ஏப் 14, 2024 03:09 AM

சென்னை : ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு சென்றுவர, குறைந்த பஸ் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு, வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, கோவை போன்ற தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில், வேலைக்காக வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனால், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஓட்டுப்போட வசதியாக, வெளியூர்களில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
இது, அதிக பயனை தராது என்றும், குறைந்த பஸ் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையத்திற்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வாக்காளர்கள் கூறியதாவது:
மதுரை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களுக்கு அரசு பஸ்சில் சென்று ஓட்டுப்பதிவு செய்து விட்டு சென்னை திரும்ப, குறைந்தது, 2,000 ரூபாய் செலவாகும். இதை விட, ஆம்னி பஸ்களில் அதிகம் செலவாகும்.
மாதம், 40,000 ரூபாய் ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களால், சொந்த ஊர் செல்வது சிரமம். பஸ் கட்டணத்திற்கு செலவு செய்யத் தயங்கியே ஓட்டுப்போட சொந்த ஊர் செல்வது கிடையாது.
இலவச பஸ் சேவை கேட்டால், ஆளுங்கட்சிக்கு சாதகமாகும் என, தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்.
எனவே, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், ஓட்டுப்பதிவு தினத்தில், 200 ரூபாய்க்குள் திருச்சி வரை போக, வரவும்; 500 ரூபாய்க்குள் கன்னியாகுமரி வரை சென்று, வரவும் அனுமதிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் பலரும் சொந்த ஊர் செல்வர். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளே, அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
இதனால், வழக்கத்தை விட அதிக ஓட்டு சதவீதம் உறுதியாக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

