சுயநலத்துடன் ஓட்டு பதிவு செய்யுங்க! பெங்களூரு எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேச்சு
சுயநலத்துடன் ஓட்டு பதிவு செய்யுங்க! பெங்களூரு எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேச்சு
UPDATED : ஏப் 13, 2024 04:13 AM
ADDED : ஏப் 13, 2024 01:02 AM

கோவை;''கோவையில், அண்ணாமலை எம்.பி., ஆக தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்,'' என்று பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறினார்.
தி வெராண்டா கிளப் மற்றும் திங்கர்ஸ் செல் அமைப்பு சார்பில், 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி, 'ஸ்பாட் லைட்' நிகழ்வு நேற்று, கோவை தாஜ் விவாந்தா ஓட்டலில் நடந்தது.
இதில், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, இளம் வாக்காளர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.
இதில், அவர் பேசியதாவது:
ஓட்டு போடாமல் தவிர்க்க, உங்களுக்கு 'சாய்ஸ்' இருக்கலாம். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து, நீங்கள் தப்ப இயலாது. ஓட்டு போடாமல் தவிர்ப்பதும், தவறான அரசியல் தலைவர்களை தேர்வு செய்வதும், உங்கள் எதிர்காலத்தை பாதித்துவிடும்.
பெட்ரோல், கல்வி, மருத்துவம், விளையாட்டு, நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தும், நல்ல தலைவரை தேர்வு செய்வதில்தான் உள்ளது. மத்தியில் ஒரு ஆட்சியும், மாநிலத்தில் ஒரு ஆட்சியும் இருப்பதால், பல திட்டங்கள் இங்கு வந்து சேர்வதில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில், பெங்களூரின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்காக மத்திய அரசு சார்பில், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்பில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரசின் மலிவு விலை மருந்தகங்கள் 132 உள்ளன.
2014ல் மெட்ரோ லைன் 7 கி.மீ., ஆக இருந்தது; தற்போது, 78 கி.மீ., ஆக உள்ளது. இதுபோன்ற பல திட்டங்கள், பெங்களூருவில் மட்டுமின்றி, மத்திய, மாநில அரசு ஒரே தரப்பினர் ஆட்சியில் இருக்கும் இடங்களில், சிறப்பாக உள்ளன.
எதிர்காலம் சிறப்பாக அமையும்
கோவையில், அண்ணாமலை எம்.பி., ஆக தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். திராவிட கட்சிகள் இந்தியாவை, வடக்கு, தெற்கு என பல பாகுபாடுகளை வைத்து பிரித்து ஆள நினைக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், ஊழல் இல்லாத ஆட்சியை, பா.ஜ., கட்சி, மோடியின் தலைமையில் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் போதை பழக்கத்திற்கு அச்சாரமிடுவதே, தி.மு.க., கட்சிதான். இளைஞர்கள், மக்களை பற்றி அவர்களுக்கு, எவ்வித கவலையும் இல்லை. எதிர்வரும் தேர்தலில் அவர்களை நிராகரித்து, தகுதியானவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு, உதயநிதி போன்று கோடிக்கணக்கில் ஊழல் செய்து பதுக்கிய பணத்தை வாரி இறைத்து, பதவி வாங்கித்தரும் தந்தை இல்லை. தி.மு.க., கட்சி தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தானது.
லோக்சபா தேர்தலில், மோடி பதவியேற்க வேண்டும், அண்ணாமலை எம்.பி., ஆக வேண்டும் என்று, நீங்கள் ஓட்டு அளிக்க வேண்டாம். உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்; தகுதியான நபர்கள் தலைவர்களாக வேண்டும் என்ற சுயநலத்துடன், ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இளம் வாக்காளர்களுக்கு நடத்தப்பட்ட வினாடி - வினா போட்டியில், 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்வில், திங்கர்ஸ் செல் மாநில தலைவர் செல்வி தாமோதர், தி வெராண்டா அமைப்பின் நிர்வாகி ஷெபாலி வைத்தியா, திங்கர்ஸ் செல் மாநில துணைத்தலைவர் சங்கர்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

