வெயில் கொடுமையால் ஓட்டளிக்க சென்ற முதியவர்கள் உயிரிழப்பு: அறிக்கை கேட்கிறது ஆணையம்
வெயில் கொடுமையால் ஓட்டளிக்க சென்ற முதியவர்கள் உயிரிழப்பு: அறிக்கை கேட்கிறது ஆணையம்
UPDATED : ஏப் 19, 2024 05:16 PM
ADDED : ஏப் 19, 2024 09:11 AM

சென்னை: சேலத்தில் ஓட்டளிக்க சென்ற முதியவர்கள் மூன்று பேர், வெயில் தாங்க முடியாமல் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டையம்பள்ளியை சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்னபொன்னு (77). இவர், செந்தாரப்பட்டியில் உள்ள ஓட்டு சாவடியில் மை வைத்துக் கொண்டு, ஓட்டளிக்க சென்ற போது ஓட்டுச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சூரமங்கலத்தில் 65 வயதான பழனிசாமி என்ற முதியவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல் திருத்தணியிலும் ஒரு முதியவர் ஓட்டளிக்க வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக சத்யபிரதா சாஹூ கூறுகையில், முதியவர்கள் உயிரிழப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்றார்.
முன்னதாக சத்யபிரதா சாஹூ கூறுகையில், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். அனைத்து இடங்களிலும் நல்லபடியாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. 4 இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

