மானிய விலையில் உளுந்து வழங்க அப்பளம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
மானிய விலையில் உளுந்து வழங்க அப்பளம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
ADDED : மே 10, 2024 04:28 AM
சென்னை : 'தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அப்பளம் ஏற்றுமதி பாதிக்கப்படுவதை தடுக்க, அப்பளம் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உளுந்து வழங்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரூ.1,200 கோடி
இந்த மனுவை, சங்கத்தின் தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், டில்லியில் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக கூடுதல் செயலர் சந்தோஷ்குமார் சாரங்கி, நுகர்வோர் விவகாரத் துறை செயலர் ஸ்ரீமதி நிதிகரேவை சந்தித்து வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து, ஜெயப்பிரகாசம் கூறியதாவது: நம் நாட்டில் இருந்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட பல வெளிநாடுகளுக்கு அப்பளம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஓராண்டிற்கு அப்பளம் ஏற்றுமதி மதிப்பு 1,200 கோடி ரூபாய்; அதில், தமிழகத்தின் பங்கு 75 சதவீதம்.
அப்பளம் உற்பத்திக்கு மூலப்பொருள் உளுந்து. தமிழகத்தில் 2023 அக்டோபரில் கிலோ உளுந்து விலை 80 ரூபாய்; தற்போது அதன் விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், அப்பளம் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
அப்பளம் ஏற்றுமதி விலை கிலோ, 180 ரூபாயாக உள்ளது. தற்போது உளுந்து விலை உயர்வால், அப்பளம் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
சிரமம் ஏற்படும்
அதேசமயம், அப்பளம் விலையை உயர்த்தாமல், ஏற்கனவே வழங்கும் விலைக்கு தான் தர வேண்டும் என்று, வெளிநாடுகளில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இதனால், புதிய ஆர்டர்கள் பாதிக்கப்பட்டு, அப்பளம் ஏற்றுமதி குறையும் என்பதால், அதன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே, அப்பளம் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, கிலோ உளுந்துக்கு, 50 ரூபாய் வரை மானியம் வழங்குமாறு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.