ADDED : மே 25, 2024 10:46 PM

காட்டுமன்னார்கோவில், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி வாயிலாக 44,856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூரில் இருந்து நீர்வரத்து இல்லாததாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வீராணம் ஏரிக்கு சரிவர திறக்கப்படவில்லை. இதனால் கோடை காலத்தில் ஏரி வறண்டது.
இந்நிலையில், சென்னையில் குடிநீர் தேவையை போக்க தமிழக அரசு, வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.
அதனடிப்படையில் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்று வழியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு கடந்த 17ம் தேதி முதல் வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நேற்று காலை கீழணைக்கு வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அது நேற்று மாலை 'ஜீரோ பாயிண்ட்' வந்தடைந்தது. திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் வீராணம் ஏரி 10 நாளில் பாதியளவு நிரம்பியதும், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவங்கும் எனக் கூறப்படுகிறது.