குழந்தைகள் படிப்பு செலவை ஏற்கிறோம்: நிர்மலா புகாருக்கு காங்., பதில்
குழந்தைகள் படிப்பு செலவை ஏற்கிறோம்: நிர்மலா புகாருக்கு காங்., பதில்
ADDED : ஜூன் 25, 2024 07:07 AM

சென்னை: “கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள்; பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை காங்கிரஸ் ஏற்கும் என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், முன்னாள் தலைவர் ராகுலும் தொலைபேசியில் கூறினர்,' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் அவர் அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இதுவரை, கார்கேயும், ராகுலும் பேசவில்லை என, நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சம்பவம் நடந்த அன்றைய தினம், கார்கே, ராகுல் இருவரும் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டனர். பாதிக்கப்பட்டு, உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தேவையான உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர். பெற்றோரை இழந்த, 45 குழந்தைகளின் படிப்பு செலவை, காங்கிரஸ் ஏற்கும் என, அறிவிக்கும்படி கூறினார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சட்டசபை மற்றும் மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் போராடி வருகிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., விசாரணை நடத்த இயலாது. இந்த அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவராக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இருக்கிறார். மலிவான அரசியல் மேற்கொள்வதில் முதன்மையானவர் அண்ணாமலைதான்.
போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிகளின் உரிமை. அதற்கான அனுமதியை போலீஸ் துறைதான் வழங்க வேண்டும். அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து, சட்டசபையில் பேசுவேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
முன்னதாக, வருமானவரித்துறையின் முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி பாலமுருகன், செல்வப்பெருந்தகை முன்னிலையில், நேற்று காங்கிரசில் இணைந்தார்.