உலகின் சிறந்த தலைநகராக டில்லியை மாற்றுவோம்; பிரதமர் உறுதி
உலகின் சிறந்த தலைநகராக டில்லியை மாற்றுவோம்; பிரதமர் உறுதி
ADDED : மார் 05, 2025 08:15 PM
சென்னை:'டில்லியை உலகின் சிறந்த தலைநகராக மாற்றுவோம்' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடிக்கு, தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே கடிதம் அனுப்பினார்.
அதற்கு பதில் அளித்து, பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி. வலுவான, திறமையான, உறுதியான அரசு அமைய, டில்லி மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த வெற்றி டில்லியின் வளர்ச்சியில், புதிய சகாப்தத்தின் துவக்கம். டில்லி மக்களின் வாழ்க்கையை மாற்றவும், மாநிலத்தின் விரிவான வளர்ச்சிக்கும், புதிய பா.ஜ., அரசு, ஏற்கனவே உறுதியுடன் செயல்படத் துவங்கி உள்ளது.
டில்லியை உலகின் சிறந்த தலைநகராக மாற்ற, அனைத்து விதமான முயற்சிகளையும் எடுப்போம். வளர்ந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதியுடன், தேசம் முன்னேறி வருகிறது.
டில்லி மக்களின் அன்பு, ஆதரவு, ஊக்கத்தால், மேலும் வலு பெற்றுள்ளோம். தேசத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்தில், டில்லி முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன். கூட்டு முயற்சிகளால், நாடு முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.