மோசடி நிதி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
மோசடி நிதி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
ADDED : ஜூன் 08, 2024 12:51 AM

சென்னை: முதலீடுகள் பெற்று மோசடி செய்ததாக, ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் மீது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி தாக்கல் செய்த மனு:
ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்., என, பல நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி, 15,000 கோடி ரூபாய்க்கு மேல், வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளன.
இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த, அரசுகள் எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை.
ஒரு சில மாதங்களுக்கு வட்டி கொடுத்து விட்டு, பின் நஷ்ட கணக்கை காட்டி நிறுவனங்களை மூடிவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடுகின்றனர். முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.
மோசடி வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். மோசடி செய்த முதலீட்டு நிறுவனங்கள் மீது, போலீசார் நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ''ஹிஜாவு, ஆருத்ரா போன்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளில், 30க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்,'' என்றார்.
இதையடுத்து, இந்த நிதி நிறுவன மோசடி வழக்குகள் மீது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வரும் 24க்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.