UPDATED : ஆக 01, 2024 12:09 PM
ADDED : ஆக 01, 2024 10:45 AM

சென்னை: 'போலி பேராசிரியர் ஊழலை அறப்போர் இயக்கம் கண்டுபிடிக்கும் வரை, அண்ணா பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டிருந்தது,' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: அறப்போர் இயக்கம் வெளிக் கொண்டு வந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 480 உறுப்புக் கல்லூரிகளில் 52,500 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவற்றில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது. பேராசிரியர் பட்டம் தாங்கிய ஐந்து பேர் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
கல்லூரிகளே மோசடி!
அறப்போர் இயக்கம் கண்டுபிடிக்கும் வரை அண்ணா பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டிருந்தது? அறிவைப் புகட்டும் கல்லூரிகளே மோசடியில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் மிகப்பெரிய அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடைபெற்றுள்ள, முறைகேட்டால் தமிழக மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதில் தொடர்புடைய 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் தீர விசாரிக்கப்பட வேண்டுமென்ற அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை மிகமிக நியாயமானதே!
நடவடிக்கை
தி.மு.க., அரசு வழக்கம்போல குழு என்ற பெயரில் காலத்தை கடத்தாமல் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படையாமல் இருக்க இம்முறைகேடு குறித்து விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். எவ்வித அரசியல் தலையீடுமின்றி உயர்கல்வி அமைச்சகம் முதல் உறுப்பு கல்லூரிகள் வரை அனைத்து நிலையிலும் முழுமையான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறா வண்ணம் விழிப்புடன் செயலாற்ற உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.