5 ஆண்டாக என்ன செய்தீர்கள்? மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்: ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
5 ஆண்டாக என்ன செய்தீர்கள்? மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்: ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
ADDED : ஆக 29, 2024 12:10 PM

மதுரை: 'ஐந்தாண்டுகளாக என்ன செய்தீர்கள்? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்' என ஐகோர்ட் மதுரைக்கிளை, மத்திய சுகாதாரத்துறையை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, விடுதி உள்ளிட்டவை 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்;
மொத்த கட்டுமானமும் 33 மாதங்களில் முடிக்கப்படும் என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க கோரி பாஸ்கர் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
சரமாரி கேள்வி
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள், 'மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எப்போது கட்டி முடிப்பீர்கள்?' என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு பதில்
இதற்கு,'கொரோனா தொற்று காலத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026க்குள் பணி முடிந்துவிடும்' என மத்திய அரசு பதில் அளித்தது.
உத்தரவு
'கொரோனா 2023ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது அதை காரணம் காட்டாதீர்கள்? கட்டுமானப்பணி எப்போது நிறைவடையும் என மத்திய சுகாதரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.