கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?: ஐகோர்ட் கேள்வி
கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?: ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜூலை 10, 2024 02:16 PM

சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனைச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வராயன் மலை மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?. பட்டியலின, பழங்குடியின மக்களின் சலுகைகள் அவர்களை சென்றடைந்துள்ளதா?.
அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள் கல்வராயன் மலைப்பகுதி மக்களை சென்றடைந்துள்ளதா?. மக்களின் ஓட்டுகளை பெற்ற பின், அடிப்படை வசதி செய்யப்பட்டதா?. இத்தனை ஆண்டுகளாக கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர்?. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, ஜூலை 24ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.