ADDED : மே 13, 2024 03:50 AM

பதிப்புரிமை என்பது, இலக்கியங்கள், இசை, நாடகம், கலைப்படைப்புகள் போன்றவற்றின் படைப்பாளர்களுக்கும், திரைப்படம், இசைப்பதிவுகள் போன்றவற்றின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் சட்ட உரிமை.
தங்களின் படைப்புகளை மறு உருவாக்கம் செய்தல், பொதுத்தொடர்புக்கு அளித்தல், தழுவி எழுதுதல், மொழி பெயர்த்தல் போன்றவை தொடர்பாக, படைப்பாளிகளுக்கு சில பாதுகாப்பு அம்சங்களை இந்த உரிமை வழங்குகிறது. கலைப்படைப்புகளுக்கு பாதுகாப்பும், வெகுமதியும் தருவது தான் இதன் பிரதான நோக்கம்.
பதிப்புரிமை பொதுவாக, 60 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இலக்கியம், நாடகம், இசை, கலைப்படைப்புகள் போன்றவற்றுக்கான பதிப்புரிமை, அவற்றின் ஆசிரியர் இறந்த பிறகும், 60 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். எவரேனும் தெரிந்தே பதிப்புரிமையை மீறினாலோ அல்லது அதற்கு துணை போனாலோ, பதிப்புரிமை சட்டத்தின், 63வது பிரிவின்படி குற்றமாகும்.
இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதே தவறை, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செய்தால், குறைந்தது ஓராண்டு சிறையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.