ADDED : ஏப் 10, 2024 05:27 AM
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணி பெண் ஒருவரை துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றுள்ளனர். இந்த வீடியோவை காண நேர்ந்தது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
திருப்பூர், வேலுார் உள்ளிட்ட மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதி கிடைக்காமல் இருப்பதே, தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்கு சான்று.
மத்திய அரசின் திட்டங்களுக்கு பெயரை மாற்றுவதில் மட்டும், முனைப்புடன் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், அந்த திட்டங்களை ஒருநாள் விளம்பரத்திற்காக வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்தி கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

