இளங்கலை படிப்பு விண்ணப்பம் அரசு கல்லுாரிகளில் எப்போது?
இளங்கலை படிப்பு விண்ணப்பம் அரசு கல்லுாரிகளில் எப்போது?
ADDED : மே 04, 2024 01:22 AM
திருப்பூர்:நாளை மறுதினம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில், அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் வழங்குவது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாளில், அரசு கல்லுாரியில் மாணவர்கள் இணைவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் கல்லுாரி நிர்வாகங்கள் கவுன்சிலிங் தேதியை அடுத்தடுத்த அறிவிப்புகளில் வெளியிடும்.
நடப்பாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 6ம் தேதி வெளியாகிறது. ஆனால், அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்ட படிப்பு விண்ணப்பம் குறித்து, கல்லுாரி கல்வி இயக்ககம் தரப்பில் இருந்து விரிவான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மாநிலம் முழுதும், 160க்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லுாரிகளில், 2.39 லட்சம் காலியிடங்கள் உள்ளன.
அரசு கல்லுாரி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
அரசு கல்லுாரிகளுக்கு 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுவது போல, அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் 'ஆன்லைன்' போன்று கவுன்சிலிங் நடத்த கல்லுாரி கல்வி இயக்ககம் ஆலோசித்துள்ளது.
அரசு கல்லுாரிகளின் இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை வெளியிட்டு, மாணவர்கள் அறிவிப்பு வெளியிட ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் வெளியாவது உறுதி. ஓரிரு நாளில், அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.