ADDED : ஏப் 10, 2024 02:40 AM

சென்னை : மயிலாடுதுறையை சில நாட்களாக மிரட்டி வரும் சிறுத்தை, எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல், வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், சிறுத்தைகள் நடமாட்டம் பரவலாக காணப்படும். இங்குள்ள அடர்காடுகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைகள் வருவதும், வனத்துறையினர் அவற்றை விரட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது.
சிறுத்தை நடமாட்டம்
இந்நிலையில், அடர்வனம் எதுவும் இல்லாத நிலையில், மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, ஏப்., 2ல் புகார் எழுந்தது. மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை தேடும் வேட்டையை துவக்கினர்.
இங்குள்ள செம்மங்குளம், சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புகார் வந்துள்ளது. அதில் செம்மங்குளம் பகுதியில், ரகசிய கேமரா பதிவு வாயிலாக, சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
முதுமலை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஆனால், மயிலாடுதுறையை ஒட்டி, அடர்காடுகள் எதுவும் இல்லாத நிலையில், இங்கு சிறுத்தை எப்படி வந்தது என்ற கேள்வி எழுகிறது.
அடர் வனப்பகுதியில் இருந்து, 50 முதல் 100 கி.மீ., தொலைவுக்கு இந்த சிறுத்தை பயணித்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. வன உயிரினங்களில் புலிகள் உணவுக்காக நீண்ட தொலைவுக்கு நடந்து செல்வது உறுதியாகி உள்ளது.
ஆனால், சிறுத்தை இப்படி நீண்ட தொலைவுக்கு நடந்து வருமா என்பது ஆச்சரியமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டில் பரனுார் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புகார் எழுந்தது.
நகரத்தை ஒட்டிய பகுதியில், சிறுத்தை எப்படி வரும் என்று, அப்போது கேள்வி எழுந்தது. ஆனால், செங்கல்பட்டில் சிறுத்தை இருப்பதை வனத்துறையினர் ஆதாரத்துடன் உறுதி செய்த பின், இந்த கேள்வி அடங்கியது.
திணறல்
புலி போன்று இல்லாமல், முயல், ஆடு, நாய் கிடைத்தாலும் சிறுத்தை தன் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் என்பதால், சமவெளி பகுதிகளில் அது பிரச்னையின்றி உலாவ வாய்ப்புள்ளது.
ஆனால், மயிலாடுதுறையை மிரட்டும் சிறுத்தை எங்கிருந்து எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல், வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பலரும் கிண்டல்
இதற்கிடையில், கடலுார் தொகுதி பா.ம.க., வேட்பாளர் தங்கர் பச்சான், தன் வெற்றி குறித்து, கிளி ஜோதிடம் பார்த்துள்ளார். அதனால், சட்ட விரோதமாக கிளியை அடைத்து வைத்ததாக, ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கூண்டில் இருந்து கிளியும் விடுவிக்கப்பட்டு உள்ளது.
வனத்துறையின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
மயிலாடுதுறையில் ஏழு நாட்களாக ஆட்டம் காட்டும் சிறுத்தையை பிடிக்க முடியாமல், கிளி ஜோதிடரை வனத்துறை பிடித்துள்ளதாக பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

