UPDATED : ஆக 01, 2024 05:51 AM
ADDED : ஆக 01, 2024 05:49 AM

புதுடில்லி : டில்லியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்குள், 10 செ.மீ.,க்கும் அதிகமாக கொட்டித்தீர்த்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடானது. வானிலை மையம் டில்லிக்கு 'ரெட் அலெர்ட்' விடுத்தது.
டில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 27ம் தேதி கனமழை பெய்தது. ராஜேந்திர நகரில் செயல்பட்டு வரும், தனியாருக்கு சொந்தமான ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் 'பேஸ்மென்ட்' எனப்படும் கீழ் தரைதளத்தில் தண்ணீர் புகுந்தது. இதில், இரண்டு இளம்பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இது, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
![]() |
இதற்கிடையே, டில்லியில் நேற்று மாலை மீண்டும் மழை துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கிய நிலையில், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக சர்ச்சைக்குள்ளான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடம் அமைந்துள்ள பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதேபோல், கொட்டும் மழையிலும் பயிற்சி மைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல்வேறு சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து, மாற்றுப்பாதைகளில் வாகனஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். டில்லி பார்லிமென்ட் வளாகம் அமைந்துள்ள பகுதி, ஐ.டி.ஓ., சந்திப்பு, கன்னாட் பிளேஸ், மோதி பாக் மேம்பாலம் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், டில்லி முழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன; 10க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
![]() |
இதற்கிடையே, வானிலை மையமும் ரெட் அலெர்ட் விடுத்தது. டில்லி பிரகதி மைதானில் ஒரு மணி நேரத்திற்குள், 11.2 செ.மீ., மழை பதிவானது. வரும் 5ம் தேதி வரை டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.