ஓட்டு சரிவால் யாருக்கு லாபம்? வழக்கு தொடுக்க பா.ஜ., முடிவு
ஓட்டு சரிவால் யாருக்கு லாபம்? வழக்கு தொடுக்க பா.ஜ., முடிவு
ADDED : ஏப் 20, 2024 11:08 PM

கோவை,:கோவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகி விட்டதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக அறிவித்தது உட்பட பல பிரச்னைகள் குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் செய்ய, கோவை மாவட்ட பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது:
கோவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தான், மாவட்ட நிர்வாகம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
நடவடிக்கை இல்லை
பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய, அரசியல் கட்சியினர் சார்பில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எந்தெந்த புகார்கள், அரசியல் கட்சிகள் சார்பில் கோடிட்டு காட்டப்பட்டதோ, அதே தவறுகள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
பலரது பெயர்களை தாங்களாகவே, 'டபுள் என்ட்ரி' என்ற பெயரில் நீக்கியுள்ளனர். அதனால் தான், கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அங்கப்பா பள்ளி ஓட்டுச்சாவடியில், 897 பேருக்கு ஓட்டுரிமை பறிக்கப்பட்டுஉள்ளது.
அதேபோல், கோவை தொகுதிக்கு உட்பட்ட பல சட்டசபை தொகுதிகளில், ஆண்டாண்டு காலமாக ஓட்டு போட்ட பலருக்கும், இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. ஓட்டுகளை நீக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது?
கோவையில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை சட்டசபை வாரியாக தெரிவித்து வந்த சூழலில், மாலை 6:00 மணி நிலவரப்படி, 72.36 சதவீதம் என, இரவு 7:00 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் அறிவித்தார்.
இரவு 10:00 மணிக்கு 64.81 என்று அறிவித்துள்ளார். 8 சதவீதம் வித்தியாசம் ஏற்பட்டது எப்படி? கணக்கீடு செய்த தேர்தல் அதிகாரிகளின் அலட்சியமா அல்லது தி.மு.க.,வினரின் சூழ்ச் சியா? ஒரு பக்கம், தேர்தல் பிரிவு அதிகாரிகளின் அஜாக்கிரதையும், அலட்சியமும் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அஜாக்கிரதை கூடாது
இந்த விவகாரங்கள் குறித்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார், மாநில தேர்தல் கமிஷனர் சத்ய பிரதா சாஹு, டில்லி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் ஆகியோரிடம் புகார் கொடுப்போம்.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளோம். வருங்காலங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அஜாக்கிரதையாக செயல்படக்கூடாது. வாக்காளர்கள் எந்த விதத்திலும் ஏமாறக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

