துப்பாக்கிச் சூடு நடத்த சொன்னது யார்?: தூத்துக்குடி பிரசாரத்தில் சீமான் கேள்வி
துப்பாக்கிச் சூடு நடத்த சொன்னது யார்?: தூத்துக்குடி பிரசாரத்தில் சீமான் கேள்வி
ADDED : மார் 30, 2024 02:40 PM

தூத்துக்குடி: அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த சொன்னது யார்? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடுகிறேன். குறைந்த ஓட்டு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள். தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த சொன்னது யார்? . அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை. ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து குரல் கொடுத்தேன்.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

