கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்?: கார்கேவுக்கு நட்டா கடிதம்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்?: கார்கேவுக்கு நட்டா கடிதம்
ADDED : ஜூன் 24, 2024 02:05 PM

புதுடில்லி: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சர் நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் நட்டா கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி அமைதி காக்கிறது. காங்., அமைதி காப்பது ஏன்?. ஏராளமான பட்டியல் இனத்தவர்கள் உயிரிழந்துள்ள போதும், காங்கிரஸ் மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சரை பதவி விலக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்?. முதல்வர் ஸ்டாலின் சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.
அழுத்தம் கொடுங்கள்!
அமைச்சர் முத்துசாமியை நீக்குவதோடு, முதல்வர் ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட அழுத்தம் கொடுக்க வேண்டும். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் மீது பழி போடுவது வெந்த புண்ணில் உப்பை தடவுவதாக உள்ளது. ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.பி.ஐ., விசாரணை
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல், பிரியங்கா நேரில் சந்திக்குமாறு மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பதற்கு பதிலாக தைரியமாக குரல் எழுப்ப முன் வர வேண்டும். ராகுல் மற்றும் பிரியங்கா குரல் எழுப்பாதது ஏன்?. கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணையை அனுமதிக்க திமுக அரசுக்கு வலியுறுத்தப்படும். இவ்வாறு கடிதத்தில் நட்டா கூறியுள்ளார்.