'எளிமையை பறைசாற்ற வேண்டிய இடத்தில் பட்டு சேலைகள் விற்பனை எதற்கு?': கேட்கிறார் நீதிபதி பரத சக்ரவர்த்தி
'எளிமையை பறைசாற்ற வேண்டிய இடத்தில் பட்டு சேலைகள் விற்பனை எதற்கு?': கேட்கிறார் நீதிபதி பரத சக்ரவர்த்தி
ADDED : ஜூலை 18, 2024 02:30 AM

சென்னை: எளிமையை பறைசாற்றும் காதி மையங்களில், பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது.
தச்சுத் தொழிலில் பயிற்சி பெற்ற தேவராஜ், சுரேஷ் ஆகியோர் காதி வாரியத்தில் பணியாற்றுகின்றனர். இருவரையும் பட்டு சேலை விற்பனை பிரிவுக்கும், சோப், தேன், விற்பனை பதிவேட்டை பராமரிக்கும் பிரிவுக்கும் மாற்றி உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் பள்ளி படிப்பை படிக்காதவர்கள் என்பதால், விற்பனை பிரிவை தங்களால் நிர்வகிக்க முடியாது என, மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட பணியில் நிரந்தரம் செய்யப்பட்ட இவர்கள், அதே பணியில் தொடர உரிமை உள்ளது. இவர்களுக்கு முறையான கல்வியும் இல்லை. மற்ற மாவட்டங்களில், தச்சுப் பிரிவுகள் இயங்குகின்றன. சென்னையில் இவர்களுக்கு பணி ஒதுக்க முடியவில்லை என்றால், மற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யலாம்.
எனவே, விற்பனை பிரிவுக்கு மாற்றிய உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. சென்னை அல்லது வேறு இடங்களில் உள்ள தச்சுப் பிரிவில் பணி அமர்த்தலாம். எளிமை, பாரம்பரியத்தை பறைசாற்ற, காதி உருவாக்கப்பட்டது; ஆனால், ஆடம்பரம், பகட்டின் குறியீடாகத் திகழும் பட்டு சேலைகள், காதியில் விற்பனை செய்யப்படுகின்றன.
காதி விற்பனை மையம் பலவற்றில் இப்போதெல்லாம் காதி துணிகள், கிராம தொழிற்சாலைகளில் தயாராகும் பொருட்களை விற்பனை செய்வதில்லை. இந்த உத்தரவின் நகலை, காதி வாரியத்துக்கு அளிக்க வேண்டும்; அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.