ADDED : ஜூன் 09, 2024 07:14 AM

சென்னை: 'யு டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததில், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பெண் காவலர்களை தவறாகப் பேசியதாக, யு டியூபர் சவுக்கு சங்கர், மே 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சங்கரின் தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், பாலாஜியும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியான ஜெயச்சந்திரனிடம் வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜெயச்சந்திரன், போலீசுக்கு சில கேள்விகள் எழுப்பியிருந்தார்.
அதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு:
காவல்துறை மீது தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானவை. காவல்துறை அதிகாரிகளுக்கு சவுக்கு சங்கர் மீது தனிப்பட்ட முன்விரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை.
அவர் மீது பெண் பத்திரிகையாளர் அளித்த புகார், வீரலட்சுமி என்பவரின் புகார், சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன் கொடுத்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குகள் பதிவாகின.
சவுக்கு சங்கரை கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது, பலதரப்பட்ட மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அவர் மீதான வழக்குகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த பின், அவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால், குண்டர் சட்டத்தில் அடைப்பது என்று முடிவானது. அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது. இது, காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.
மேலும், குண்டர் சட்டத்தில் அடைத்தது தொடர்பான முழு ஆவணங்களும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தில் அடைத்து, பிறப்பித்த உத்தரவை அறிவுரை கழகத்தின் ஆய்வுக்கும் அரசு அனுப்பி வைத்துள்ளது. எனவே, மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.