ADDED : மார் 10, 2025 05:57 AM
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அடுத்த வேளாங்கண்ணி, ரயில்வே ஸ்டேஷன் அருகே கருவைக்காட்டில், 22 வயது வாலிபர், நேற்று முன்தினம் மாலை அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு, கங்கம்மா சர்க்கிளை சேர்ந்த எலன்மேரி, 21, என்ற பெண், தன் கணவரை காணவில்லை என, வேளாங்கண்ணி போலீசில் புகார் தெரிவித்தார்.
அப்போதுதான், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அவரது கணவர் ஜனார்த்தனன், 22, என, தெரிந்தது.
போலீசார், அந்த பெண்ணிடம் தீவிரமாகவிசாரித்ததில், கணவரை, கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இருவரும் பிப்., 28ல் காதல் திருமணம் செய்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன் வேளாங்கண்ணி லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்களுடன் சாகர், 21, மற்றும் 17 வயது சிறுவன் தங்கினர்.
நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகே சாகர் மற்றும் சிறுவன் சேர்ந்து, ஜனார்த்தனனை அடித்து கொலை செய்து விபத்துபோல் காட்டி தப்பினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியில் எலன்மேரிக்கு முதல் திருமணம் நடந்துள்ளது. இரண்டாவதாக ஜனார்த்தனனை திருமணம் செய்துள்ளார்.
எலன் மேரிக்கும், சிறுவனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதை கைவிட ஜனார்த்தனன் கூறியதால், அவரை வேளாங்கண்ணி அழைத்து வந்து கொலை செய்துள்ளனர்.
எலன்மேரி, சாகர் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.