பிப்., 29ல் ஆஜராகணுமாம்! போலீஸ் சம்மனில் 'காமெடி'
பிப்., 29ல் ஆஜராகணுமாம்! போலீஸ் சம்மனில் 'காமெடி'
ADDED : மார் 02, 2025 05:50 AM

தட்டார்மடம் : சாத்தான்குளம் அருகே புகார் மனு அளித்த ஒருவரை, பிப்., 29ல் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அனுப்பிய சம்மன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், நேதாஜி தெருவைச் சேர்ந்த வசந்த் என்பவரின் பூர்வீக வீடு, துாத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சாலைப்புதுார் கிராமத்தில் உள்ளது. வீடு மற்றும் அங்குள்ள நிலம் தொடர்பாக வசந்த், அவரது உறவினர் செல்வராஜ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தட்டார்மடம் காவல் நிலையத்தில் வசந்த் புகார் அளித்தார். விசாரணைக்கு, நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். அதில், பிப்., 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்ததால், வசந்த் அதிர்ச்சியடைந்தார்.
இந்த ஆண்டு பிப்., 28ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், போலீசார் கவனக்குறைவாக 29ம் தேதி என குறிப்பிட்டு, சம்மன் அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.