'கார்பெட் ஏரியா' விபரங்களை வெளியிடுமா வீட்டு வசதி வாரியம்?
'கார்பெட் ஏரியா' விபரங்களை வெளியிடுமா வீட்டு வசதி வாரியம்?
ADDED : மார் 02, 2025 01:10 AM

சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட விதிகளின்படி, வீடு விற்பனையின் போது, 'கார்பெட் ஏரியா' விபரங்களை, வீட்டுவசதி வாரியம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, ஒதுக்கீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வீடு, மனை விற்பனையின் போது ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம், 2016ல் ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி, 5,381 சதுர அடி நிலத்தில், விற்பனை நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் குடியிருப்பு திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்.
பதிவு செய்வது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணையம், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின் வீடு விற்பனையின் போது, ஒவ்வொரு வீட்டுக்குமான சுவர்களுக்கு இடைப்பட்ட பயன்பாட்டு பகுதியான, 'கார்பெட் ஏரியா' விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
முறையாக கட்டட அனுமதி பெற்ற பின், கார்பெட் ஏரியா உள்ளிட்ட விபரங்களுடன் சம்பந்தப்பட்ட திட்டத்தை பதிவு செய்ய வேண்டும். வீடு விற்பனை தொடர்பான விளம்பரம், கையேடுகள் மற்றும் ஆவணங்களில், கார்பெட் ஏரியா விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே, வீட்டுக்கான விலையும் இருக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது. இதை மீறும் கட்டுமான நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், கார்பெட் ஏரியா விபரங்களை, மக்களுக்கு தெரிவிக்க முன்வந்து உள்ளன. ஆனால், வீட்டுவசதி வாரிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளில், கார்பெட் ஏரியா விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் சட்ட விதிகளின்படி, கார்பெட் ஏரியா விபரங்களை வெளியிடுவது, வீட்டுவசதி வாரியத்துக்கும் பொருந்தும். ஆனால், வாரிய விளம்பரங்கள், அறிவிப்பு பலகைகளில், 'பில்டப் ஏரியா' அடிப்படையிலேயே வீட்டின் அளவுகள் தெரிவிக்கப்படுகின்றன.
கார்பெட் ஏரியா விபரத்தை வாரியம் வெளிப்படையாக தெரிவித்தால், மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பிற தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும், இது பழக்கமாவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.