ADDED : பிப் 15, 2025 12:39 AM

சென்னை: ''போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிப்பது குறித்து, ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
போக்குவரத்து ஊழியர்களின், 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்தார். அதிகாரிகள் மற்றும் 74 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நான்கு மணி நேரம் நடந்த பேச்சிற்கு பின், அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:
போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, முதல்வர் அலுவலகத்தில் விவாதிக்கப்படும். சில கோரிக்கைகளை நிதித்துறையுடன் விவாதிக்க வேண்டியுள்ளது. சிலவற்றை முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்று, எவற்றை நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்றுவோம்.
இது தொடர்பாக, அடுத்த கட்டமாக அனைத்து சங்கங்களையும் ஒரு சேர அழைத்து பேச்சு நடத்தப்படும். அதன் பிறகு ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.