ADDED : ஆக 19, 2024 06:23 AM

சென்னை: தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, மாநில மின் பகிர்ந்தளிப்பு மைய தகவலின்படி, பல்வேறு நிறுவனங்கள், 9100 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன்.
வழக்கமாக சீசன் காலத்தில், காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 8 - 10 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தியாகும். நடப்பு சீசனில் காற்றின் வேகம் போதிய அளவுக்கு இல்லை. அதனால், மே முதல் இம்மாதம், 16ம் தேதி வரை காற்றாலைகளில் இருந்து, 626 கோடி யூனிட் மின்சாரமே உற்பத்தியாகியுள்ளது.
இதுவே, முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில், 718 கோடி யூனிட்களாக இருந்தது. எனவே, கடந்த சீசனில் தினமும் சராசரியாக, 6.65 கோடி யூனிட்களாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, இந்த சீசனில், 5.79 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது. 2022 ஜூலை 9ல், 12.02 கோடி யூனிட் கிடைத்தது. இதுவே, இதுவரையான காற்றாலை மின் உற்பத்தியில் அதிக அளவு.
இதுகுறித்து, அதிக காற்றாலை அமைத்துள்ள, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
இந்தாண்டை போல, இதற்கு முன் எந்த ஆண்டிலும் காற்றின் வேகம் குறைவாக இருந்ததில்லை. அதற்கு, காலநிலை மாற்றமே காரணம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த சீசனில் மே முதல் ஆக., 16 வரை, 92 கோடி யூனிட் காற்றாலை மின் உற்பத்தி குறைந்து உள்ளது.
அடுத்த மாதத்துடன் காற்றாலை சீசன் முடிவுக்கு வருமா அல்லது நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த சீசனில் மின் உற்பத்தி குறைந்தது, காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு இழப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.