ADDED : மே 28, 2024 04:39 AM
சென்னை : தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், முப்பதுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கா, 43. இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:
மிரட்டல்
என் கணவர் இறந்து விட்டார். குடும்ப வறுமை காரணமாக ராணிப்பேட்டையில் தோல் பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன்.
என் நண்பர் வசந்த் வாயிலாக, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சசிகலா என்பவர் எனக்கு அறிமுகமானார்.
அவர், தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார். அவருடன், அபிஷேக், அலெக்ஸ் பாண்டியன், சாரதி உள்ளிட்டோரும் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர். 10,000 ரூபாய்க்கான திட்டத்தில் முதலீடு செய்தால், ஆறு மாதம் கழித்து, 10 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றனர்.
அவர்களை நம்பி, நானும் என்னால் அறிமுகம் செய்யப்பட்ட நபர்களும், 25.29 லட்சம் ரூபாய் செலுத்தினோம்.
சசிகலா உள்ளிட்டோர் எங்களுக்கு தங்க நாணயமும் தரவில்லை. பணத்தை கேட்டால், ரவுடிகளை ஏவி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மோசடி குறித்து ராணிப்பேட்டை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தோம்; நடவடிக்கை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரைந்து நடவடிக்கை
கங்கா உள்ளிட்டோர் கூறுகையில், 'சசிகலா பின்னணியில் மிகப்பெரிய கும்பல் உள்ளது. அவர்கள் தங்க நகை முதலீடு திட்டத்தின் வாயிலாக, கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி உள்ளனர்.
அதுவும் தோல் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை ஊழியர்களை குறி வைத்து, இந்த மோசடி நடந்துள்ளது. அந்த கும்பல் மீது, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.