நேற்று உஸ்ஸ்!.. இன்று புஸ்ஸ்!: துரை வைகோவின் திடீர் பல்டி
நேற்று உஸ்ஸ்!.. இன்று புஸ்ஸ்!: துரை வைகோவின் திடீர் பல்டி
UPDATED : மார் 26, 2024 10:08 AM
ADDED : மார் 25, 2024 06:25 PM

சென்னை: செத்தாலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என அமைச்சர் நேருவுக்கு எதிராக நேற்று திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆவேசமாக பேசினார். இது சர்ச்சையானது. ஆனால் ஒரே நாளில் பல்டி அடித்தார் அவர். 'எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். அமைச்சர் நேரு தன்னை மகன் போல் நினைத்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்தினார்' என துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று உஸ்ஸ்!
தி.மு.க., கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் நேற்று (மார்ச் 24) நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அண்ணாவின் கட்சி தி.மு.க, கருணாநிதியின் கட்சி தி.மு.க, என் அப்பாவும் தி.மு.க.,வில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். உதயசூரியன் சின்னத்தை மதிக்கிறோம். அதற்காக, கட்சி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு சின்னத்தில் நிற்க வாய்ப்பில்லை. செத்தாலும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என பேசியது சர்ச்சையானது.
இன்று புஸ்ஸ்!
இந்நிலையில், இன்று (மார்ச் 25), ‛‛எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். அமைச்சர் நேரு தன்னை மகன் போல் நினைத்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்தினார். நாங்கள் எல்லாரும் திமுக.,வின் அடையாளமாக இருக்கிறோம். தேர்தல் பிரசாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.
பம்பரம் சின்னத்தை தேர்தல் கமிஷன் இன்னும் கொடுக்கவில்லை. விசாரணை அமைப்புகள் மற்றும் தேர்தல் கமிஷன் பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளது'' என துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதனால் கே.என்.நேரு, துரை வைகோ இடையே மனக்கசப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

