ADDED : மே 29, 2024 12:57 AM
சென்னை:''நம் உடல், மனம், புத்தி ஆகியவற்றை முறைப்படுத்துவதன் வாயிலாக, எல்லையற்ற திறனை துாண்டி விட்டு, நமக்கு உள்ளேயுள்ள ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்த முடியும். அதற்கான பாதைக்கு யோகா அழைத்து செல்லும்,'' என, ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஜூன், 21ல், சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் உலக யோகா தினத்தை முன்னிட்டு, மாதா அமிர்தானந்தமயிஅருளாசி வழங்கியதாவது:
யோகா என்பது, நம் ரிஷிகள் வழங்கிய விலை மதிப்பில்லா வரப்பிரசாதம். யோகா என்றால் ஒன்று கூடுவது என்று பொருள். நம் உடல், மூச்சு, மனம், விழிப்புணர்வு ஆகியவற்றை முறைப்படி ஒன்று சேர்ப்பதுவே யோகம்.
நம் உடலை கட்டுப்படுத்த முடிந்தால், மூச்சை கட்டுக்குள் கொண்டு வர முடியும்; மனதையும் கட்டுப்படுத்த முடியும். அமைதியான மனதால் எதையும் சாதிக்க முடியும். அப்படிப்பட்ட முழுமையான முன்னேற்றமே யோகத்தின் நோக்கம்.
நம்மிடம் அதிக திறன் வாய்ந்த கணினியை, மளிகை சாமான் செலவுகளை குறிக்கவும், வரவு, செலவுகளை சரிபார்க்கவும் மட்டும் பயன்படுத்தினால், அந்த கணினியின் திறனை வீணடிக்கிறோம் என்று அர்த்தம்.
அப்படித்தான் இன்று நம் உடலை வீணடித்து கொண்டிருக்கிறோம்.நம் உடல், மனம், புத்தி ஆகியவற்றை முறைப்படுத்துவதன் வாயிலாக, எல்லையற்ற திறனை துாண்டிவிட்டு, நமக்கு உள்ளேயுள்ள ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்த முடியும். அதற்கான பாதைக்கு யோகா அழைத்துச் செல்லும்.
எந்த விதமான பயிற்சியும் நம் உடலுக்கும், மனதிற்கும் நன்மை தரும். வெறும் பயிற்சிகளை விட யோகா மிக உயர்ந்தது. வழக்கமான உடல்பயிற்சிகளை யோகாவும் தரும். அதனுடன் அமைதியும் தரும்.
தியானத்தில் ஆழ்ந்திருப்பதை போன்ற அனுபவத்தை தருகிறது. நம்மை நல்வழிப்படுத்துகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அளிக்கிறது. உடலின் பல்வேறு அங்கங்களை மேம்படுத்துகிறது. யோகா மற்ற உடற்பயிற்சிகளை விட சிறந்தது.
யோகாவை சிறார் மட்டுமின்றி, முதியோரும் செய்து பழகலாம். 14 வயதிற்கு உட்பட்டோர் சில வகையான ஆசனங்களை மட்டுமே செய்து பழகலாம். அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும்.
விதவிதமான உடல்கள் இருந்தாலும் உள்ளே ஒளிர்வது சத்திய சொரூபம். இந்த உயர்ந்த திருக்காட்சியை உணரும் படியாய் யோகா நம்மை உயர்த்த வேண்டும்.
முனிவர்கள் வழங்கியவிலை மதிப்பில்லா இந்த செல்வத்தை, நாம் முறைப்படி பயன்படுத்துவோம். யோகா செய்வதன் வாயிலாகசமுதாய ஒற்றுமையும், கூட்டுறவும் மேம்படட்டும்.
இவ்வாறு அவர் அருளாசி வழங்கினார்.