ADDED : செப் 13, 2024 03:49 AM

கோவை : 'யோகா ஒருவருடன் மற்றொருவர் போட்டி போட்டு செய்யக்கூடிய விளையாட்டாக இருக்க முடியாது. மனிதர்களை எல்லையற்ற உணர் திறன், வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி' என, சத்குரு தெரிவித்துள்ளார்.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44வது பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் வரும் 2026ல் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் யோகாவும் இடம்பெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
போட்டி விளையாட்டுகளின் அரங்காக இருக்கும் ஒரு இடத்திற்குள், 'யோகா' நுழைவது வேதனை, ஏமாற்றத்தை அளிக்கிறது. யோகா ஒரு போட்டியாக இருக்க முடியாது.
யோகா என்பது, மனிதர்களை வரையறுக்கப்பட்ட சாத்தியங்களில் இருந்து, எல்லையற்ற உணர்வுத் திறன், வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி மற்றும் சுய பரிணாம வளர்ச்சிக்கான தொழில் நுட்பமாகும். இதை வேறு யாருடனும் போட்டியாக செய்யக்கூடாது.
இதன் மூலம் சக்தி வாய்ந்த யோக அறிவியலை, மற்றொருவரை விட சிறப்பாக செய்ய முயற்சிக்கும் சர்க்கஸ் போன்ற செயல்முறையாக நாம் குறைத்து விடுவோம்.
யோகாவின் அடிப்படை விழிப்புணர்வை பற்றியது, ஒப்பீடு செய்வதையும், போட்டி போடுவதையும் பற்றியது அல்ல. யோக அறிவியலின் பிறப்பிடமாக விளங்குகிறது. இது ஒரு அபத்தமான விளையாட்டாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விவேகம் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

