மோடி ஆட்சியில் 10 லட்சம் பேருக்கு வேலை: மத்திய இணை அமைச்சர் பேச்சு
மோடி ஆட்சியில் 10 லட்சம் பேருக்கு வேலை: மத்திய இணை அமைச்சர் பேச்சு
ADDED : பிப் 12, 2024 11:15 PM

சிவகங்கை, : மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞருக்கு அரசு பணி வழங்கியுள்ளது,'' என சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் நடந்த (ரோஜ்கர் மேளா) வேலை உத்தரவு வழங்கும் விழாவில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசினார்.
சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி படையில் மத்திய அரசு பணிக்கான வேலை உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது. பயிற்சி படை ஐ.ஜி., ஆஜ்ஜல் சர்மா தலைமை வகித்தார். கமாண்டிங் அதிகாரி சுரேஷ் குமார், மருத்துவ அதிகாரி ஜிபேர் ஆலம், திருவாரூர் மத்திய பல்கலை பதிவாளர் திருமுருகன், தபால் துறை உதவி இயக்குனர் ரகுநாத், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா பங்கேற்றனர்.
விழாவில் திருச்சி என்.ஐ.டி., எல்லை பாதுகாப்பு (பி.எஸ்.எப்.,) படை, தபால் துறை, மத்திய தொழில் பாதுகாப்பு (சி.ஐ.எஸ்.எப்.,) படை, இ.பி.எப்.ஓ., மத்திய பொதுப்பணி, திருவாரூர் மத்திய பல்கலை, யூனியன் பாங்க் ஆப் இந்தியா போன்ற இடங்களில் 138 பேருக்கு பணி உத்தரவு ஆணையை, மத்திய இணை அமைச்சர் ேஷாபா கரந்தலஜே வழங்கினார்.
பிரதமரின் 10 லட்சம் பேருக்கு வேலை
அமைச்சர் பேசியதாவது, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமர்ந்த போது, நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
அதை நிறைவேற்றும் விதமாக நேற்று மட்டும் நடந்த வேலை வழங்கும் விழா மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
இது வரை 12 வேலை வழங்கும் (ரோஜ்கர் மேளா) விழா நடத்தப்பட்டதில், 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தரப்பட்டுள்ளது.
விவசாய துறை மூலம் 30 ஆயிரம் மகளிர் 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி பெற்றுள்ளனர். பிரதமர் மோடி தனது 73 வது வயதில், தினமும் 18 மணி நேரம் நாட்டிற்காக உழைத்து, வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்.
அவரை போன்றே புதிதாக பணியில் சேரும் இளைஞர்கள், தாங்கள் பணிபுரியும் துறையை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்று, நாட்டின் வளர்ச்சிக்கு நேர்மையான முறையில் பாடுபட வேண்டும், என பேசினார்.
நாட்டு வளர்ச்சிக்கு நேர்மையான பணி
அனுஸ்ரேயா சுக்லா, உத்தரபிரதேசம்: நான் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்து, தேர்ச்சி பெற்றேன். எனக்கு மத்திய பொதுப்பணித்துறையில் பணி கிடைத்துள்ளது. இடையூறு, இடைத்தரர்கள் இன்றி, தகுதியுள்ளவர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நேர்மையான ஆட்சி தந்த வேலை
ஆர்.பூர்ணிகா, பொள்ளாச்சி: என் தந்தை ஒரு விவசாயி. அம்மா குடும்ப தலைவி. எங்கள் வீட்டில் நான் தான் முதல் பட்டதாரி.
என் தகுதியை மட்டுமே பார்த்து, மத்திய அரசு எனக்கு திருச்சி என்.ஐ.டி.,யில் லேப் டெக்னீஷியன் பணி வழங்கியுள்ளது. நேர்மையான ஆட்சியில் கிடைத்த வேலை.
லஞ்சம், சிபாரிசின்றி தகுதிக்கு வேலை
கே.மனோஜ்குமார், திருப்பூர்: நான் தொடர்ந்து யு.பி.எஸ்., தேர்வுகளை 5 முறை தேர்வு எழுதினேன். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்ட் பணிக்கு விண்ணப்பித்தேன்.
தகுதியின் அடிப்படையில், எந்தவித லஞ்சமின்றி நேர்மையான முறையில் இந்த பணியை எனக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
என் தந்தை மெக்கானிக், தாய் விவசாயி. என் குடும்ப சூழலை உணர்ந்து படித்து, மத்திய பாதுகாப்பு படையில் வேலை பெற்றதை மகிழ்ச்சி.
இவ்வாறு கூறினர்.