ADDED : நவ 28, 2025 06:50 AM

சென்னை: கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், உயிரிழந்த நபர்களின் உறவினர்கள், 10 பேரின் வாக்குமூலத்தை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்தனர்.
கடந்த செப்., 27ல், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் இறந்தனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உட்பட, 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில், கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் 10 பேர், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி,நேற்று மதியம், 12:00 மணி வரை ஏழு பேரிடமும், அதன்பின் மூன்று பேரிடமும் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
அப்போது, தங்களின் உறவினர்களை, கூட்டத்திற்கு அழைத்து சென்ற நபர்கள் குறித்த விபரங்களையும் பெற்றுள்ளனர்.

