'100 நாள் வேலை ஊழியர்களை விவசாய பணியில் ஈடுபடுத்தலாம்'
'100 நாள் வேலை ஊழியர்களை விவசாய பணியில் ஈடுபடுத்தலாம்'
ADDED : ஜூன் 24, 2026 06:56 AM

மதுரை: திருச்சி மாவட்டம், அலகரையை சேர்ந்த அம்பிகா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'அலகரை கால்நடை மருத்துவமனையில் 2016ல் துாய்மை பணியாளராக நியமிக்கப்பட்டேன் . பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு வழக்கறிஞர், 'மனுதாரர் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டார். அவருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது. பணி நிரந்தர உரிமை கோர முடியாது' என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
100 நாள் வேலைத்திட்டத்தை துவக்கிய காலத்தில் , பெரும்பாலான பொதுப்பணிகள் மனித உழைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் பல பணிகளை திறம்பட, குறைந்த நேரத்தில் முடிக்க முடிகிறது.
மனித உழைப்பிற்கான உண்மையான தேவை நிலவும் துறைகளுக்கு அந்த உழைப்பின் ஒரு பகுதியை திசைதிருப்பலாமா என்ற கேள்வி எழுகிறது.
விவசாய பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது.
கிராமப்புற அரசு நிறுவன பணிகளுக்கு 100 நாள் வேலை தொழிலாளர்களை பயன்படுத்துவதை போல், விவசாய துறையிலும் அவர்களை ஈடுபடுத்துவதற்கான வழிமுறையை உருவாக்க முடியுமா என, ஆராய வேண்டும்.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயிகள் எதிர்கொள்ளும் ஆள் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும். அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்க இயலும்.
விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதம் எனும் புதிய திட்டத்திற்கு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கும் போது, விவசாயத்துறையில் தொழிலாளர்களை ஈடுபடுத்த பரிசீலிக்கலாம்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
