ADDED : ஆக 14, 2011 01:04 AM

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் 100 கடல் கன்னிகள் இருப்பதாக, அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடல் கன்னி குறித்த கதைகளை, இன்னும் நாம் புத்தக அளவிலேயே படித்து வருகிறோம். கடல் கன்னி என்றால், உடல் முழுவதும் மீனைப்போலவும், முகம் பெண்ணைப்போலவும் இருக்கும், என்று நம்மை இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் கடல் கன்னி என்பது, கடல் பசு தான் என்று கூறுகின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். கடல்வாழ் பாலூட்டிகளில் கடற்பசு மிகவும் மாறுபட்டது. தாவர உண்ணியான இவை கடல் புற்களை உண்ணும். இந்திய கடற்கரையில், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இவை காணப்படுகின்றன.பிறந்த இளம் கடற்பசுவின் குட்டி, ஒன்று முதல் 1.5 மீ.மீ. வரை நீளமும், 20 கிலோ எடையுடன் இருக்கும்.
கடற்பசு சிறிய குழுக்களாக காணப்படும். நுரையீரல் கொண்டு வளிமண்டல வாயுவை சுவாசிப்பதால், அவ்வப்பொழுது கடலின் மேற்புறத்துக்கு வரும். யானை போன்று இவற்றின் இனப்பெருக்கம் மெதுவாகவே நடைபெறும். இரு பேறுகாலத்துக்குட்பட்ட இடைவெளி மூன்று ஆண்டுள். ஒரு முறை ஒரு கன்று தான் ஈனும். இவற்றின் மாமிசம் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்பதால், இவற்றை மறைமுகமாகவும், நேரடியாகவும் வேட்டையாடி அழித்து வருகின்றனர். மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கடற்தாவரங்கள் அழிந்து வருவதால், கடல் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 100 கடல் பசுக்களே உள்ளன. கடல்பசுக்களை வேட்டையாடுவோருக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும், 25 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வகை இருந்தாலும், இதை பிடிப்போர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தினர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.