ADDED : ஆக 26, 2025 07:22 AM

சென்னை : இந்திய பட்டய கணக்காளர் குழுமத்தின் சார்பில், சென்னையில் நேற்று 1,000 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
ஐ.சி.ஏ.ஐ., எனும் இந்திய பட்டய கணக்காளர் குழுமம் சார்பில், நாடு முழுதும் டில்லி, மும்பை, புனே, கொல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 15 நகரங்களில், நேற்று பட்டமளிப்பு விழா ஒரே நேரத்தில் நடந்தது. இதில், புதிதாக பட்டய கணக்காளராக தகுதி பெற்ற 13,737 பேருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
டில்லியில் நடந்த விழாவில், இந்திய போட்டி தேர்வுகளுக்கான ஆணையமான சி.சி.ஐ.,யின் தலைவர் ரவ்னீத் கவுர், ஐ.சி.ஏ.ஐ.,யின் தலைவர் சரண்ஜோத் சிங் நந்தா உள்ளிட்டோர் பட்டங்களை வழங்கினர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், 1,000 பேருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மத்திய கவுன்சில் உறுப்பினரும், பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளருமான சி.ஏ.ராஜேந்திரகுமார், பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மத்திய கவுன்சில் உறுப்பினர்களும் பட்டய கணக்காளர்களுமான ரேகா உமாஷிவ், அபிஷேக், ஸ்ரீப்ரியா, ரேவதி ரகுநாதன், ஐ.சி.ஏ.ஐ.,யின் மாநில கவுன்சில் தலைவர் சி.ஏ.அபிஷேக் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

