10,000 பேருக்கு எல்.எஸ்.டி., போதை பொருள் விற்பனை சேலம் புள்ளி வாக்குமூலம்
10,000 பேருக்கு எல்.எஸ்.டி., போதை பொருள் விற்பனை சேலம் புள்ளி வாக்குமூலம்
ADDED : பிப் 23, 2024 02:01 AM

சென்னை: 'ஜெர்மனியில் இருந்து, எல்.எஸ்.டி., என்ற, ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருளை வாங்கி, 10,000த்திற்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்துள்ளோம்' என, கைதான சேலத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 50. இவர், 'டார்க்நெட்' இணையதளம் வாயிலாக, ஜெர்மனியில் இருந்து, எல்.எஸ்.டி., என்ற போதை பொருளை வாங்கி, கூரியர் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு, 'சப்ளை' செய்துள்ளார்.
இவர் உட்பட, 15 பேரை மத்திய குற்றப்பிரிவு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம் பாலாஜி அளித்துள்ள வாக்குமூலம்:
பாலாஜி வட மாநிலத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் சேலத்திற்கு வந்து தங்கி உள்ளார்; திருமணமாகாதவர். நம் நாட்டில், எல்.எஸ்.டி., போதை பொருள் கடத்தலில், 'டாப் -10' முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர். பொறியாளர்கள், கல்லுாரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்கள், மார்க்கெட்டிங் மேலாளர்கள், சினிமா பிரபலங்கள் தான் இவரின் டார்கெட்.
சமூகவலைதளங்களில், நீண்ட நேரம் ஆன்லைனில் இருப்பவர்களை குறி வைப்பார். அவர்களுடன் நட்பாக பழகி, கூரியரில், எல்.எஸ்.டி., அனுப்பி வைப்பார்.
'ஆன்லைன்' வாயிலாக அடிக்கடி பொருட்கள் வாங்குபவர்களும், பாலாஜி விரித்த வலையில் விழுந்துள்ளனர். இவர், 10,000 பேருக்கு மேல், எல்.எஸ்.டி., போதை பொருள் விற்பனை செய்துள்ளார். பண பரிமாற்றம் அனைத்தும், கிரிப்டோகரன்சி வாயிலாகவே செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.