ADDED : மே 15, 2025 11:19 PM
சென்னை:'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் நாராயணன், சென்னை விமான நிலையத்தில், அளித்த பேட்டி:
கடந்த ஜனவரியில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 100வது ராக்கெட்டை, இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வரும், 18ல் விண்ணில் ஏவப்பட உள்ள, 101வது ராக்கெட்டான, 'பி.எஸ்.எல்.வி., - சி 61' மிகவும் முக்கியமானது. இதன் வாயிலாக, புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
இந்தியா - பாகிஸ்தான் போரில், நம் அனைத்து செயற்கைக்கோள்களும் சிறப்பாக செயல்பட்டன. இந்தியா, விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ்கிறது. அணுசக்தி ஆராய்ச்சியில், நாம் மற்ற நாடுகளுடன் போட்டி போடவில்லை.
இஸ்ரோ இதுவரை அனுப்பிய அனைத்து செயற்கைக்கோள்களும் நன்றாக இயங்கி வருகின்றன. அவை, மக்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுக்கு தொடர்ந்து பயன்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.