வி.ஐ.டி., பல்கலை 'ஸ்டார்ஸ்' திட்டத்தில் 102 மாணவர்கள் பயன்
வி.ஐ.டி., பல்கலை 'ஸ்டார்ஸ்' திட்டத்தில் 102 மாணவர்கள் பயன்
ADDED : ஜூலை 18, 2025 08:32 PM
சென்னை:வி.ஐ.டி., பல்கலையின், 'ஸ்டார்ஸ்' திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படித்த 102 மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு உள்ளதாக, பல்கலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வி.ஐ.டி., பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:
வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவற்றில் ஒன்றான, 'ஸ்டார்ஸ்' திட்டத்தின் கீழ், கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி வழங்குகிறார்.
அந்த வகையில், 2008 முதல் 2024 வரை, 707 முதல் பட்டதாரிகள் உட்பட, 1,046 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், 801 மாணவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில், மாதம் ஆறு முதல், 40 லட்சம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.
இந்த கல்வியாண்டில், தலா 51 மாணவ, மாணவியர் என, 102 பேர், ஸ்டார்ஸ் திட்டத்தில் தேர்வாகி உள்ளனர். அவர்களில், 90 மாணவர்கள் வேலுார் வளாகத்திலும், 12 மாணவர்கள் சென்னை வளாகத்திலும் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான சேர்க்கையை, பல்கலை வேந்தர் விஸ்வநாதன் இன்று வழங்குகிறார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் சுப்புலட்சுமி, பள்ளிக் கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.