கற்பித்தலை தாண்டி கவனிக்கணும் 108 பணிகள்; வைரலாகும் பட்டியலால் சர்ச்சை
கற்பித்தலை தாண்டி கவனிக்கணும் 108 பணிகள்; வைரலாகும் பட்டியலால் சர்ச்சை
ADDED : நவ 28, 2024 07:29 AM

தமிழகத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் கற்பிக்கும் நேரம் சுருங்கி, கற்பித்தல் அல்லாத விஷயங்கள் குறித்து ஆவணப்படுத்துவதில் 108க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
கல்வித்துறை செயல்பாடுகள் மீது சமீபகாலமாக அரசியல் ரீதியான விமர்சனம் எழுந்து வருகிறது.
குறிப்பாக எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா போட்டிகள், உயர்கல்வி வழிகாட்டி, வாசிப்பு இயக்கம், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கரியர் கைட்னஸ், ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல், 21 வகை நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஹைடெக் லேப், பதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் தடையின்றி அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் தொடர வேண்டும் என்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டப்படுகிறது.
இதுதவிர பல்வேறு மத்திய அரசு நிதி ஆதாரங்களை பெறுவதற்கான மாணவர்கள், ஆசிரியர்கள் நலன்சார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிப்பதில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
இதுதவிர பெரும் சவாலாக உள்ள 'எமிஸ்' பணிகளாலும் ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.
இதற்கிடையே பணிச்சுமையை ஏற்படுத்தும் கற்பித்தல் அல்லாத பணிகளையும் ஆசிரியர்கள் மீது திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட கற்பித்தல் அல்லாத பணிகள் குறித்த விரிவான லிஸ்ட் ஆசிரியர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கு 100 சதவீதம் கற்பித்தல் பணி மட்டுமே இருந்தது. தற்போது கற்பித்தலை தாண்டி பிற பணிகளால் பெரும் சுமையாக உள்ளது.
தற்போது, 'கருணாநிதி விழா, அண்ணாதுரை விழா, நான் முதல்வன் திட்டம், வானவில் மன்றம், சிறார் திரைப்படம் காண்பித்தல், அறிவியல் கண்காட்சி நடத்துதல், இடைநிற்றல் மாணவர்களை தேடிப்பிடிப்பது, காலணி உட்பட நலத்திட்ட பொருட்களை நோடல் மையங்களுக்கு சென்று பெற்று 'லோடு மேன்' போல் பள்ளிக்கு கொண்டு செல்வது, கலைத்திருவிழா, எமிஸ் பதிவேற்றங்கள் என கற்பித்தல் அல்லாத 100க்கும் மேற்பட்ட திட்ட பணிகளை செய்வது' தான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது.
இதற்காக தான் பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூ. பல கோடிகள் ஒதுக்கப்படுகிறதோ என சந்தேகம் எழுகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றனர்.
- நமது நிருபர் -