ADDED : அக் 10, 2024 12:23 AM
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 1,097 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ள நிலையில், அபராதமின்றி இடங்களை திரும்ப ஒப்படைக்க, 13ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்துள்ளது. தற்போது, அரசு கல்லுாரியில் 33 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில் 498 என, மொத்தம் 531 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
அதேபோல், அரசு கல்லுாரிகளில் 62 பி.டி.எஸ்., உட்பட 566 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், அவ்விடங்களை அபராதமின்றி திரும்ப அளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, 13ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள் வரும் 14ம் தேதியும், துணை மருத்துவ படிப்புகளுக்கான வகுப்புகள் 16ம் தேதியும் துவங்கும் என, மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.