ADDED : மார் 08, 2024 06:56 AM

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு ஒரு லோகச்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா, 'சீட்' பெறப்பட உள்ளது. அதற்கான உடன்பாடு இன்று நடக்கிறது,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டு விருப்பம் தெரிவித்து, ஆறு தொகுதிகளின் பட்டியலை வழங்கியது.
ஆனால், இரண்டு கட்ட பேச்சு நடத்தியும், ஒரு தொகுதி தான் தர முடியும், ராஜ்யசபா சீட் வழங்க முடியாது என, தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் தெரிவித்தனர்.
இதனால், அதிருப்தி அடைந்த வைகோ, 'எங்களுக்கு தொகுதிகளே ஒதுக்கி தரவில்லை என்றாலும், தி.மு.க., கூட்டணியில் தான் நாங்கள் நீடிப்போம்' எனக்கூறி, உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இசைவு தெரிவிக்காமல் இருந்தார்.
இதையடுத்து, ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட பின், தொகுதி பங்கீடு குழுவினரும், வைகோவிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ம.தி.மு.க., நிர்வாகக்குழு அவசர கூட்டத்தை தாயகத்தில் நேற்று வைகோ கூட்டினார். அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமை வகித்தார்.
பொதுச்செயலர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மை செயலர் துரை, துணை பொதுச்செயலர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொக்கையா உள்ளிட்ட தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உட்பட 200 பேர் பங்கேற்றனர். தேர்தலில், தேசிய மற்றும் மாநில கட்சிகளும் இணைந்து 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் இயங்கி வரும் இண்டியா கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை துரை முன்மொழிந்தார்.
வைகோ பேசியது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வை அழிப்போம் என, பிரதமர் மோடி பேசியுள்ளார். தி.மு.க.,வை பாதுகாக்க, எப்போதும் நாம் உறுதுணையாக இருப்போம்.
கடந்த தேர்தலில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா 'சீட்' தான் கிடைத்தது. இந்த தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டோம்.
புதிய கட்சிகள் வரவினால் நமக்கு ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் தருவதற்கு சம்மதித்துள்ளனர். நாமும் அதை ஏற்று உடன்பாட்டில் நாளைகையெழுத்திடுவோம்.இவ்வாறு வைகோ பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

