ஓட்டல் அபகரிப்பு: கே.என்.நேரு உட்பட 11 பேருக்கு முன்ஜாமின் : ஐகோர்ட் கிளை உத்தரவு
ஓட்டல் அபகரிப்பு: கே.என்.நேரு உட்பட 11 பேருக்கு முன்ஜாமின் : ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஆக 26, 2011 12:28 AM

மதுரை : திருச்சி ஓட்டல் காஞ்சனாவை அபகரிக்க முயன்ற வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் ராமஜெயம் உட்பட, 11 பேருக்கு மதுரை ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது.
நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல், திருச்சி போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், தன்னை, சிலர், ஓட்டல் காஞ்சனா நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றி, அபகரிக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து கே.என்.நேரு, அவரது சகோதரர் ராமஜெயம், துணை மேயர் அன்பழகன், ரங்கநாதன், சுப்ரமணி, சாமிநாதன் டி.எஸ்.பி., குருசங்கரநாராயணன், வளமங்கைநாச்சியார், சுப்புலட்சுமி, சங்கரிதேவி, ரங்கநாயகி மீது, கான்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.மாலா முன் நேற்ற இறுதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் அசோக்குமார், மொய்தீன் பாட்சா, செந்தில்குமார் வாதிடுகையில், ''ஓட்டல் நிர்வாகம் குறித்து, 2007 முதல் பிரச்னை உள்ளது. சிவில் வழக்கும் நடந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின், புகார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்,'' என்றனர். ஜாமின் வழங்க புகார்தாரர் கதிர்வேல் சார்பில், வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆட்சேபம் தெரிவித்தார். அரசு கூடுதல் அட்வகேட் ஜெரனல் செல்லப்பாண்டியனும் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும், 11 பேருக்கும் முன்ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.