நாடு முழுதும் 112 மருந்துகள் தரமற்றவை: சோதனைக்கு உட்படாத 'கோல்ட்ரிப்' மருந்து
நாடு முழுதும் 112 மருந்துகள் தரமற்றவை: சோதனைக்கு உட்படாத 'கோல்ட்ரிப்' மருந்து
ADDED : அக் 23, 2025 10:28 PM

சென்னை : நாடு முழுதும், 112 மருந்துகள் தரமற்றவை என, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ள நிலையில், குழந்தைகள் இறப்புக்கு காரணமான, 'கோல்ட்ரிப்' மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம், மத்திய பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' மருந்தை உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்த, ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில், அம்மருந்து தயாரிக்கப்பட்டதால், அந்நிறுவன உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்நிறுவனத்தில் முறையாக ஆய்வு செய்யவில்லை எனக்கூறி, மருந்து தர ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு, 'கோல்ட்ரிப்' மருந்து வினியோகிக்கப்பட்ட நிலையில், எங்குமே அதனை தரப் பரிசோதனை செய்யவில்லை என்பது, தற்போது தெரியவந்துள்ளது.நாடு முழுதும், செப்டம்பர் மாதம் ஆய்வு செய்து கண்டறியப்பட்ட, தரமற்ற மருந்துகளின் பட்டியலை, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ளது. அதில் காய்ச்சல், கிருமித் தொற்று, சளி பாதிப்பு, ஜீரண மண்டல பாதிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், 112 மருந்துகள் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 'கோல்ட்ரிப்' மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அதேநேரம், தமிழகத்தில் இருந்து, கடந்த மாதம் எந்தெந்த மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன என்ற விபரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது. அதேபோல், நாடு முழுதும் மருந்து உற்பத்தி விபரத்தையும், மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், மருந்து மூலப்பொருள் உற்பத்தி ஆலைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.