ADDED : டிச 04, 2025 05:40 AM

சென்னை: கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த, 1,127 பாம்புகளை, தீயணைப்பு துறை அதிகாரிகள் பிடித்தனர்.
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, பாம்புகள் உயிர் பிழைக்க, வீடுகளுக்குள் படையெடுத்து வருகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள், அவசர போலீஸ் எண் 100 மற்றும் 101 வாயிலாக, சென்னை எழும்பூரில் உள்ள, மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இவ் விபரம் தீயணைப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மாதம் 29ம் தேதியில் இருந்து, நேற்று வரை, மாநிலம் முழுதும், வீடுகளில் புகுந்த, 1,127 பாம்புகளை பிடித்து, வனத்துறையினரிடம், தீயணைப்பு துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், ஆபத்தான இடங்களில் சிக்கி இருந்த, 18 பேரையும், எட்டு கால்நடைகளையும் மீட்டுள்ளனர். சாலை உள்ளிட்ட இடங்களில், சாய்ந்து கிடந்த, 88 மரங்களை அப்புறப்படுத்தி உள்ளனர்.
சென்னை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம் உட்பட, பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீரை வெளியேற்றி உள்ளதாக, தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

