ADDED : ஆக 29, 2011 10:01 PM

சென்னை : ''மலை சார்ந்த பகுதிகளில் உள்ள, 115 குக்கிராமங்கள், இன்னும் மின் இணைப்பு பெறவில்லை.
அந்த கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்று, மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில், அ.தி.மு.க., உறுப்பினர் ரமேஷ் பேசும்போது, 'ஜவ்வாது மலையிலிருந்து, திருப்பத்தூர் செல்வதற்கான இணைப்புச் சாலை, பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இந்த சாலையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மலைவாழ் கிராமங்களில், மின் வசதி இல்லை' என்றார்.
இதற்கு, முதல்வர் ஜெயலலிதா கூறும்போது, 'முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்திலேயே, இந்த சாலையை அமைக்க, மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டது. அதை அப்படியே மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இந்த பிரச்னை தொடர்பாக, மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி, அனுமதி பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறும்போது, 'மின்வசதி பெறாத மலைவாழ் குக்கிராமங்கள் அதிகம் இருப்பதாக உறுப்பினர் குறிப்பிட்டார். மதுரை, தேனி, திருவண்ணாமலை, கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில், 115 குக்கிராமங்கள் மின் வசதி பெறாமல் உள்ளன. அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகள் உள்ளன. மிகவும் சிறிய கிராமங்கள். அந்த கிராமங்களுக்கும் மின் இணைப்பு வசதி கொடுக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.